சிறுவன் கடத்தல் வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற கோடைக்கால அமர்வு நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன் மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த கடத்தல் விவகாரத்திற்கும் ஜெகன்மூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கடத்தப்பட்ட நபர் அவர் வசமோ அல்லது அவரது இடத்திலோ இருந்து மீட்கப்படவில்லை என்றும் அப்படி இருக்கையில் ஜெகன் மூர்த்திக்கு சம்பந்தம் உள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என வாதிட்டார்.
ஜெகன்மூர்த்தி தரப்பு வாதத்தையேற்ற நீதிபதி, மனு மீது பதிலளிக்க தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்ததோடு ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் 25 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை கட்டி வழக்கமான ஜாமீனை பெற்றுக் கொள்ளவும் ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி ஆணையிட்டார்.