பணப்பட்டுவாடாவில் திமுகவினர் வேடிக்கை பார்க்கும் பறக்கும் படை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் பிரசார கூட்டத்திற்கு பணப்பட்டுவாடா செய்து திமுகவினர் கூட்டத்தை கூட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதனை தடுக்காமல் அப்பகுதியில் இருந்த பறக்கும் படையினரும் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது விரிவாக காணலாம்..

தேர்தல் பரப்புரைக்கு அழைத்து வந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் வீதம் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்த காட்சிகள்தான் இவை...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் பணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை திமுகவினர் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வாணியம்பாடியில் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்ட போது, கூட்டத்தை சேர்க்க வெளியில் இருந்து ஆட்களை வரவழைத்து, அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது அம்பலமாகியுள்ளது.

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பீம்குளம், காவலூர், நிம்மியம்பட்டு, வெள்ளகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டத்தை சேர்ப்பதற்காக வெளியில் இருந்து வேன் மற்றும் மினி ஆட்டோக்கள் மூலம் பெண்களை அழைத்து வந்த திமுகவினர், பரப்புரை முடிந்த பின்னர் அவர்களுக்கு 200 ரூபாய் வீதம் ஒவ்வொருவருக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கதிர் ஆனந்த் பரப்புரையின் போது, அதே இடத்தில் பறக்கும் படை அலுவலர்கள் இருந்தும் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை அவர்கள் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மேலும் கூட்டத்தில் அதிகமான ஆட்களை சேர்த்தும், சிறுவர்களிடம் கட்சிக் கொடியை கொடுத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர். குறிப்பாக, வேட்பாளர் மீது பூக்கள் தூவுவதற்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது சிறுவர்களை ஏற வைத்த சம்பவம், காண்போரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவினரின் தேர்தல் பரப்புரைக்காக அப்பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால், அரசு பேருந்துகளில் பயணித்த பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

எனவே தேர்தல் விதிமீறல் நடைபெற்றது வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுகவினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தேர்தல் பறக்கும் படையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day