படுக்கை அறையை நோட்டமிடும் சைக்கோ அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

வாலாஜாபாத் அருகே இரவு நேரங்களில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக படுக்கை அறைகளை மர்ம நபர் நோட்டமிட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சைக்கோ மனிதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்களின் இன்னல்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.எஸ்.பி. சிட்டி பகுதியில் உள்ள மூன்று தெருக்களில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, மாற்று திறனாளிகள், குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள வீடுகளின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக படுக்கை அறைகளைக் நோட்டமிட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 10:00 மணியளவில் அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம், மர்ம நபர் ஒருவர் தலையில் தொப்பி அணிந்து ஜன்னல் வழியாக படுக்கையறையை நோட்டமிடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

அதேபோல், அந்த குடியிருப்பு பகுதியில் தெரு விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளதால், இரவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் சாலையை கடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தெரு விளக்குகள் இல்லாததால் இரவில் விஷ ஜந்துக்கள் மற்றும் தெரு நாய்கள் குழந்தைகளை கடித்து விடுவதாகவும், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நிலைமை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, அவளூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.எஸ்.பி. சிட்டி பகுதியில் உள்ள தெருக்களில் மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், வீடுகளை நோட்டமிட்டு சுற்றித் திரியும் மர்ம நபரை போலீசார் பிடித்து கைது செய்யவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day