நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்றிரவு, செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு திடீரென உள்ளே சென்ற வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தினர். 2 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில் அலுவலகத்தில் இருந்து வெளியில் எடுத்து வரப்பட்ட பெரிய மூட்டையில் கட்டு கட்டுகாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 32 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வருமான வரித்துறை சோதனையை கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுகவினர் கோஷங்களை எழுப்பினர். இதனால் பதறிப்போன மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், சத்தம் போடாதீர்கள் செந்தில் பாலாஜி நிலைமைதான் நமக்கும் என தெரிவித்தது திமுக கட்சிக்காரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.


varient
Night
Day