எழுத்தின் அளவு: அ+ அ- அ
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா என்ற பெண் மீது 2010ம் ஆண்டு துணை முதலமைச்சர் உதவியாளரின் பெயரை கூறி 16 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காரில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் தான் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், கோசாலையில் வைத்து காவலர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்தது. இந்நிலையில் புகார் அளித்த நிகிதா என்ற பெண் தனது தாயருடன் வீடியோ வெளியிட்டு பேசினார். அதன்பிறகு நிகிதாவின் விவரங்கள் சேகரிக்கப்பட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த 2010ம் ஆண்டு அதே திருமங்கலம் காவல் நிலையத்தில் ராஜாங்கம், வினோத்குமார், தெய்வம் ஆகியோர் கொடுத்த மோசடி புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 2010ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினின் உதவியாளர் தனக்கு மிகவும் பரிட்சயமானவர் என்றும் அவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடமும் மொத்தம் 16 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமல் நிகிதா மோசடி செய்துள்ளதாக வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.