திருவாரூர் : தூர்வாரியதாக கணக்குகாட்டி ரூ.50 லட்சம் மோசடி - குவியும் குற்றச்சாட்டுக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூரில் பாசன வாய்க்காலை தூர்வாராமல், தூர்வாரியதாக கணக்கு காட்டி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மோசடி எவ்வாறு அம்பலமானது? பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டுகள் என்ன? என்பது குறித்து சற்று விரிவாக காணலாம்.

திருவாரூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓடம்போக்கியாறு, சுக்கானாறு ஆகியவற்றின் கிளை வாய்க்கால்கள் மூலம், குளங்களின் நீர் இருப்பை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால், கேக்கரை, பழவனக்குடி, பிலாவடி, மருதப்பட்டினம் முதலான பல்வேறு கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெற்று வந்தன.

ஆனால் கடந்த பல ஆண்டுகாலமாக இத்தகைய பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல், வீட்டுமனைகளாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் வாய்க்கால் செல்லும் வழித்தடங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் திறந்துவிடப்படுவதாகவும், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாய்க்கால்களில் கொட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பல கிலோமீட்டர் தூரம் வரையிலான இத்தகைய வாய்க்கால்களில் நீரோட்டத்திற்கு தடையாக இருந்துவரும் ஆகாயதாமரை செடிகள், முட்புதர்கள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றிட பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், 
ஓடம்போக்கியாறு, சுக்கானாறு ஆகியவற்றின் கிளை வாய்க்கால்களை தூர்வாருவதற்காக மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வரின் தனிப்பரிவுக்கு கோரிக்கை மனுக்களும் அனுப்பப்பட்டன.

அந்த வகையில் இந்து மக்கள் கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவர் ஜெயராமன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார். அவரது மனுவிற்கு பதில் அளித்த அதிகாரிகள், 24 கிலோ மீட்டர் தூரம் திருவாரூர் நகர்வழியாக பாயும் வாய்க்கால் தூர்வாரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல், தூர்வாரப்பட்டதாக போலியாக கணக்கு காட்டப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆட்சியாளர்கள் சுமார் 50 லட்ச ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், இதற்கு கண்டனம் தெரிவித்து போராடியபோது, காவல்துறை தங்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று துன்புறுத்தி பின்னர் விடுவித்ததாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

கடந்த 46 ஆண்டுகளாக இவ்வாய்கால் தூர்வாரியதே கிடையாது எனக்கூறும் பொதுமக்கள், வாய்க்கால்களில் கலக்கும் கழிவுநீரால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.

வாய்க்கால் தூர்வாரும் பணியில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, பொதுமக்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே திருவாரூர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day