ஜவ்வரிசியில் கலப்படம் - சேகோ ஆலைக்கு சீல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்ய வைத்திருந்த கலப்பட பொருள்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சேகோ செர்வ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவு பொருள்களில் கலப்படம் செய்து உயிருக்கு உலை வைக்கும் விவகாரம் பற்றிய தொகுப்பை தற்போது காண்போம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில், மரவள்ளி கிழங்கை அரவை செய்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த ஜவ்வரிசி உள்ளிட்ட உணவு பொருள்கள், சேலம் சேகோ சர்வ் மூலம் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாத்திரை தயாரிக்கவும் ஸ்டார்ச் மாவு பயன்படும் நிலையில், உணவுப் பொருளான ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் மற்றும் ரசாயனம் சேர்க்கக்கூடாது என உணவு பாதுகாப்பு துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஆத்தூர், தெற்குகாடு, பைத்தூர் சாலை பகுதியில் சாந்தி என்பவரின் சேகோ ஆலையில், சேலம் சேகோ சர்வ் அதிகாரிகள் மற்றும் ஆத்தூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்தினர்.

அப்போது சேகோ ஆலையில் 33 கேன்களில் தடை செய்யப்பட்டுள்ள சோடியம் ஹைப்போ குளோரைடு ரசாயனம் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜவ்வரிசி தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த இந்த சோடியம் ஹைப்போ குளோரைடு ரசாயனம், 16 ஆயிரத்து 200 கிலோ சேகோ, 10 ஆயிரத்து 800 கிலோ ஸ்டார்ச் மில்க், 5 ஆயிரத்து 400 கிலோ ஈர ஸ்டார்ச் மாவு மற்றும் ஆயிரத்து 650  லிட்டர் ஹைப்போ கெமிக்கல் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

15 லட்சத்து 31 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள ரசாயனம் மற்றும் கலப்பட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதில் இருந்து நான்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக உணவுப் பொருள் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புட் கிரேட் கெமிக்கல் மட்டுமே பயன்படுத்தலாம் என்ற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய விதிகளை மீறி நான் ஃபுட் கிரேட் கெமிக்கல் பயன்படுத்தியதால், ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த அதிகாரிகள், ஆலைக்கும் சீல் வைத்தனர்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஆலை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், சோதனை தொடரும் என்றும், கலப்பட ஆலைகள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து தலைவாசல் அருகே தனியார் ஆலையில் சோதனை நடத்திய அதிகாரிகள், 19 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சேகோ மற்றும் ரசாயன பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Night
Day