கஞ்சா போதையால் அப்பாவியை கொன்னுட்டாங்க... நிர்கதியான மனைவி...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகளை தட்டி கேட்ட கூலி தொழிலாளியை 4 பேர் கொண்ட ரவுடிகள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொடூர கொலையால் கணவனை இழந்து ஆதரவற்ற நிலையில் வேதனையில் தவித்து வருகிறார் அவரது மனைவி...

சென்னை புளியந்தோப்பு குமாரசாமி ராஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சக்திவேல். இவரது மனைவி சோபா. இவரது வீட்டருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை சக்தி வேல் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், கடந்த 3 தேதி இரவு டீக்கடையில் இருந்த சக்திவேலை சரமாரி வெட்டி விட்டு தப்பி சென்றனர். 

ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பேசின்‌ பிரிட்ஜ் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி நவீன்குமார் என்ற சுண்டு, மட்ட அஜீத், சிலம்பரசன், விக்கி என்ற தேள்விக்கி ஆகிய 4 ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டபோது, அதனை தட்டக்கேட்டதால் கூலித் தொழிலாளியான சக்திவேலை கொலை செய்ததைக வாக்குமூலம் அளித்தனர்.

இந்த பகுதியில் இனி கஞ்சா இருக்க கூடாது என்றும், தனக்கு குழந்தையும் இல்லை, தற்போது கணவரும் இல்லாமல் அனாதையாகிவிட்டதாக உயிரிழந்த சக்திவேலின் மனைவி ஷோபா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கஞ்சா போன்ற போதை பொருட்களை காவல்துறையினர் அழித்து வருவதாக கூறப்படும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாகி கொண்டேதான் இருப்பதாகவும் ஷோபா குற்றம்சாட்டினார். 

கஞ்சா போதைக்கு தன்னுடைய தாலியே கடைசியாக அறுந்ததாக இருக்க வேண்டும் என்றும், ஒரு அப்பாவியை அநியாயமாக வெட்டி படுகொலை செய்துவிட்டார்கள் என்றும் ஷோபா வேதனை தெரிவித்தார்.

கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து போவது மட்டுமில்லாமல், இளைஞர்களின் வாழ்க்கையும் சீரழிந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுக்க காவல்துறையும், தமிழக அரசும், முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day