எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எலக்ட்ரிக் பைக் விற்பனை ஷோரூமில் புகுந்து சேல்ஸ் மேனேஜரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவில்பட்டி - எட்டயபுரம் நெடுஞ்சாலையில் எலக்ட்ரிக் பைக் விற்பனை ஷோரூம் உள்ளது. இதில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சதீஷ்குமார், பணியில் இருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரை கீழே தள்ளிவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சதீஷ்குமார் கீழே சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷ் குமாரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஷோரூமில் சர்வீஸ் பிரிவில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவருக்கும், சதீஷ்குமாருக்கும் நெருக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் போனில் மாறி, மாறி மெசேஜ் அனுப்பியதை பார்த்த அப்பெண்ணின் கணவர் முத்தையா இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவர் முத்தையா ஷோரூமுக்குள் புகுந்து சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது.