எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரஷ்யாவில் 49 பேருடன் மாயமான விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில், அங்காரா ஏர்லைன்ஸால் இயக்கப்படும் அன்டோனோவ் ஏ என் -24 விமானம் சீன எல்லைக்கு அருகிலுள்ள டின்டா என்ற நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உட்பட 49 பேர் இருந்தனர். அதிகாலையில் புறப்பட்ட அந்த விமானம், டின்டாவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டின்டாவை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானம் ரேடாரில் இருந்து மாயமானது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது, அமுர் பிராந்தியத்தில் உள்ள வனப் பகுதியில், தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விழுந்து நொறுங்கி எரிந்து கொண்டிருந்ததை மீட்புப் படையினர் கண்டு பிடித்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 49 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடம் கரடு முரடனா வனப்பகுதியாக இருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் மீட்புப் படையினருக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. விபத்தில் உயிரிழந்த பயணிகளின் அடையாளங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து ரஷ்ய புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தரையிறங்கும் போது நிலவிய மோசமான வானிலையே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், விபத்து குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார். இர்குட்ஸ்கை தலைமையிடமாகக் கொண்டு 22 விமானங்களுடன் செயல்பட்டுவரும் அங்காரா ஏர்லைன்ஸ், சைபீரியா மற்றும் தூர கிழக்கின் தொலைதூரப் பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.