கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளைக் கொன்ற வழக்கில் குன்றத்தூர் அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் விஜயின் மனைவி அபிராமி. இவர்களுக்கு ஏழு வயதில் அஜய் என்ற மகனும் 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். அபிராமி அடிக்கடி தனது வீட்டருகே உள்ள பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிடுவவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரியாணி பிடித்து போனதால் கணவர் இல்லாத நேரத்திலும் கடைக்கு போன் செய்து பிரியாணியை வரவழைத்து சாப்பிட்டு வந்த அபிராமிக்கும், கடை ஊழியரான மீனாட்சி சுந்தரத்திற்கும் இடையே நெருக்கம் அதிகரித்து கள்ளக்காதலாக மாறியது.
இதனையறிந்த அபிராமியின் குடும்பத்தினர் குழந்தைகளை காண்பித்து அறிவுறை கூறியுள்ளார். ஆனால் கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் பெற்ற குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அபிராமி கொலை செய்தார். இதனைதொடர்ந்து கேரளா தப்பிச் செல்ல முயன்ற அபிராமியையும் மீனாட்சி சுந்தரத்தையும் நாகர்கோயிலில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அபிராமி மீதும் அவரது கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரம் மீதும் இருநூறு பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
அனைத்து விசாரணைகள் மற்றும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் அபிராமியும் அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளித்த காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டு அபிராமியும் அவரது கள்ளக்காதலனும் தேம்பி தேம்பி அழுதனர்.