எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக வரும் 12ம் தேதி சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்கிறார். அதன், பதவியேற்பு விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அப்பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணணும், இந்தியா கூட்டணி சார்பாக தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல் ஆளாக பிரதமர் மோடி வாக்களித்த நிலையில், அவரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
மக்களவை, மாநிலங்களவை மற்றும் நியமன உறுப்பினர்கள் என மொத்தம் 781 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 767 பேர் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவுக்கு பின்பு மாலை 6 மணியளவில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை செயலாளர், 452 வாக்குகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் அமோக வெற்றிபெற்றதாக அறிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி 300 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
இதனையடுத்து, 15வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழத்து தெரிவித்து வருகின்றனர். வரும் 12ம் தேதி சி.பி ராதாகிருஷ்ணன் குடியரசுத்துணை தலைவராக பதவியேற்பார் என்றும், அவரது பதவியேற்பு விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.