நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கவுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் என்றும், பொது வாழ்க்கையில் உள்ள நீண்ட அனுபவம் நாட்டின் வளர்ச்சிக்கு பயனளிக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் என்றும், சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள் அதிகாரம் பெறுவதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என புகழாரம் சூட்டி உள்ளார். மேலும், அவர் தமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த குடியரசுத் துணைத் தலைவராக இருப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.