ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாட்டை தொடர்ந்து ரே பரேலியிலும் அவர் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு

80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 

அமேதி தொகுதியில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக இருந்தார் ராகுல் காந்தி. ஆனால், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவின்  ஸ்மிருதி ராணியிடம் அவர் தோல்வியைத் தழுவினார். எனினும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் அவர் வெற்றி பெற்றதால், எம்பி பதவியில் நீடித்தார். தற்போது நடைபெற்றுவரும் மக்களவை தேர்தலிலும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

ரேபரேலி தொகுதியில் எம்.பியாக இருந்த சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுவரை நடந்து முடிந்துள்ள 2 கட்ட வாக்குப் பதிவிலும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை அளித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் மக்களவைத் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் வடநாட்டில் ஏதேனும் ஒரு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்த வேண்டும் என கட்சியின் தலைவர்கள் பலரும் விரும்பினர். 

அதன்படி, ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலியிலும் போட்டியிட வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர். 
இதனால் அந்த இரு தொகுதிகளிலும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிற, ஒரு வழியாக மனு தாக்கலுக்கு கடைசி நாளான மே 3ம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. முக்கிய திருப்பமாக, ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கட்சியின் மூத்த தலைவர் கிஷோரி லால் சர்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 

இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, 2 தொகுதிகளில் போட்டியிட ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் மவுனம் காத்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் அகிலேஷ் யாதவ் தொலைபேசியில் பேசியதாக அவர்கள் கூறினர். காந்தி குடும்பம் அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியிடவில்லை என்றால், அது உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அகிலேஷ் யாதவ் கூறியதாகவும் நிர்வாகிககள் தெரிவித்தனர்.

கட்சிக்காக தேர்தல் பணியாற்றுவதே தனது விருப்பம் என்று கூறி பிரியங்கா காந்தி ஒதுங்கிக் கொள்ள, ஒரு கட்டத்தில் அவருடைய கணவர் ராபர்ட் வதேராவை போட்டியிட வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. அப்படி வாய்ப்பு வழங்கினால் குடும்ப கட்சி என்ற போர்வையை காங்கிரஸ் மீது சுமத்த நேரிடும் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராகுல் காந்தியையே ரேபரேலியில் களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் 5ம் கட்டமாக வரும் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day