எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் மோடி எப்போதும் நண்பர்தான், இந்தியா- அமரிக்கா இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்த விதிப்பு விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா இடையே பிரச்னை வெடித்துள்ள நிலையில், வாஷிங்டனில் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது இந்தியாவுடனான உறவுகளை மீட்டெடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி எப்போதும் நண்பர்தான், அவர் ஒரு சிறந்த பிரதமர் என்றும் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் இந்த தருணத்தில் அவர் செய்வது பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். எனினும், இந்தியா அமெரிக்கா இடையே மிகச் சிறப்பான உறவு எப்போதும் இருப்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் டிரம்ப் கூறினார்.
டிரம்பின் கருத்துக்கு பதிலளித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்பின் உணர்வுகளையும், இரு நாட்டு உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுவதாகவும், முழுமையாகப் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்குடைய விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.