புதுச்சேரி சிறுமி கொலை - குற்றவாளிகள் மீது பாய்ந்தது போக்சோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்களின் அஞ்சலிக்குப்பின், சிறுமியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி சோலைநகரை சேர்ந்த நாராயணன் - மைதிலி தம்பதியின் 9 வயது மகள், கடந்த சனிக்கிழமை காணமல் போன நிலையில், நேற்று முன்தினம் மாலை அம்பேத்கர் நகரில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த முதியவர் விவேகானந்தன், கருணாஸ் உட்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றதும், சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றபோது சிறுமி உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து செய்வதரியாது சிறுமியின் கை, கால்களை கட்டி, விவேகானந்தனின் வீட்டிற்கு பின்புறம் உள்ள கால்வாயில் சடலத்தை வீசியதும் அம்பலமாகியுள்ளது. 

இதையடுத்து சிறுமி மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

இதனிடையே உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புக்கு மத்தியிலும், சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோரை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் பெற்றோரிடம் உறுதி அளித்தார். மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். தொடர்ந்து சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால், உடற்கூராய்வு நிறைவடைந்த பிறகு சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதைதொடர்ந்து சிறுமியின் உடல் முத்தியால்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலிசெலுத்தினார்.  பின்னர் சிறுமியின் தாயை அரவணைத்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாம் நிலை குலைந்து போய் இருப்பதாகவும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் உறுதிபட தெரிவித்தார். 


Night
Day