புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்ற 52-வது தலைமை நீதிபதியாக  பி.ஆர்.கவாய் பதவியேற்றுக் கொண்டார்.
 
உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றநிலையில்,  52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திரெளபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

மஹாராஷ்டிராவின் அம்ராவதியைச் சேர்ந்த  பி.ஆர்.கவாய்,  கடந்த 1985ம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். பின்னர் 1992ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக பி.ஆர்.கவாய் நியமனம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து, 2003ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் இருந்துள்ளார்.கடந்த  2019ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். உச்சநீதிமன்றம் வழங்கிய பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளின் பகுதியாக கவாய் இருந்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பண மதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் இவரும் ஒருவராக இருந்துள்ளார்.   52ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர்.கவாய்  6 மாதங்கள் பதவியில் இருப்பார்.

பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத்தலைவர்  ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கவாய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Night
Day