பீஹாரில், 202 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இமாலய வெற்றியை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாதனை படைத்துள்ளன. பெரும்பான்மைக்கு தேவையானதைவிட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது முதல்கட்டமாக 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 67.13 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகின.  

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எல்லாம் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக போட்டியிட்ட 101 தொகுதிகளில் 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 85 இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. 28 இடங்களில் போட்டியிட்ட சிராக் பாஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

5 இடங்களில் போட்டியிட்ட இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ராஷ்டிரிய லோக் மோர்ச்சா போட்டியிட்ட 4 இடங்களில் 4 இடங்களிலும் என 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆர்ஜேடி கட்சி போட்டியிட்ட 143 தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 20 இடங்களில் களமிறங்கிய சிபிஐ எம்எல் கட்சி 2 இடத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் 6 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.


Night
Day