பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 6வது நாளான இன்று பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பிக்கள் பிரியங்கா காந்தி, விஜய் வசந்த், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்பிக்கள் கனிமொழி  உள்ளிட்ட ஏராளமான எம்பிக்களும் இதில் கலந்து கொண்டு கைகளில் எஸ்ஐஆர்-க்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டு, நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். 

பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், பாஜக அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாத சம்பவங்கள் ஏன் மீண்டும் மீண்டும் நடக்கின்றன என கேள்வி எழுப்பினார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்காரவாதிகள் எங்கே போனார்கள்? என்பதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறினார்.

இதனிடையே டிம்பிள் யாதவ் குறித்து அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவர் பேசிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொலைக்காட்சி விவாதத்தின் போது அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி சமாஜ்வாதி கட்சி எம்பி டிம்பிள் யாதவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது இமாம் சங்க தலைவருக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ், சமாஜ்வாதி எம்பியும், அகிலேஷ் யாதவ்வின் மனைவியை குறித்து அவதூறாக பேசியுள்ளது பெரும் கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் அகிலேஷ் யாதவ் ஏன் அமைதியாக இருக்கிறார். தனது மனைவி குறித்த அவதூறு கருத்துக்கு பதிலளிக்காமல் இருப்பது கண்ணியத்தை விட அரசியல் முக்கியம் என்பதை காட்டும் விதமாக இருப்பதாக விமர்சித்தார். 

அகில இந்திய இமாம் சங்க தலைவரின் சர்ச்சை கருத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் நடத்திய போராட்டத்துக்கு கருத்து தெரிவித்த டிம்பிள் யாதவ், மணிப்பூர் சம்பவத்திற்கு எதிராக பாஜக எம்பிக்கள் போராடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தார். மணிப்பூர் பெண்களுடன் பாஜக நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் டிம்பிள் யாதவ் கூறினார். 


Night
Day