எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பகல்ஹாம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை அடைகிறேன். பகல்ஹாமில் அப்பாவி மக்களை பலிவாங்கிய தீவிரவாதத்திற்கு இந்தியா கொடுத்துள்ள பதிலடி இது. இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும், தீவிவாதத்தை முழுமையாக வேரறுக்கவும் இந்தியா உறுதி பூண்டுள்ளதாக பிதிவிட்டுள்ளார்.
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத தளங்களை மட்டுமே தாக்கி இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பகல்ஹாமில் இருந்து தான் இந்த தாக்குதல் தொடங்கியது. அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்று இந்திய அரசாங்கம் கூறியிருந்தது. அதன்படி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். ராணுவ பகுதியோ அல்லது பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை. நாங்கள் போரை விரும்பவில்லை, அமைதியான முறையில் வாழவே விரும்புகிறோம். இதற்கு முதலில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
பகல்ஹாமில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடிதனமாக நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், பயங்கரவாத்திற்கு உலகம் பூஜ்ஜியம் சகிப்புதன்மையை காட்ட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்தே ஒழிக்க இந்தியா உறுதி கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் கூறியபடி பயங்கரவாதத்தை இந்தியா வேரறுத்தே தீரும் என பதிவிட்டுள்ளார்.