நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா உரை

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் ஆட்சி என்றால் அது தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சிதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்ற குமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை, குடியரசு துணை தலைவர்  வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு நன்றி தெரிவித்தக் கொள்வதாக கூறினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அழித்து பயங்கரவாதிகளின் முதுகெலும்பை பிரதமர் மோடி முறித்துக் காட்டியதாக அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார். 

தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சரோ, பிரதமரோ, யாராக இருந்தாலும் சிறைக்கு சென்றால் பதவியில் நீடிக்க முடியாது என்பதை உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக சாடினார். திமுக அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் பல மாதங்கள் சிறை சென்றதை சுட்டிக் காட்டிய அமித்ஷா, சிறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா, சிறையில் இருந்து கொண்டே ஆட்சி நடத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். ஆகவே பதவி நீக்க மசோதாவை கறுப்பு சட்டம் என்று கூறுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை என்று கூறினார். 

நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் ஆட்சி என்றால் அது இங்கு நடைபெறும் திமுக ஆட்சிதான் என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். டாஸ்மாக் ஊழல், மணல் கொள்ளை, போக்குவரத்து துறை ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல், 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் என திமுக அரசின் ஊழல்களை பட்டியலிட்ட அமித் ஷா, மக்கள் பணத்தை திமுக அரசு கொள்ளையடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

ஒருபோதும் ராகுல் காந்தி பிரதமராக முடியாது, உதயநிதி முதலமைச்சராக முடியாது என்று திட்டவட்டமாக கூறிய அமித்ஷா, வரும் தேர்தலில் திமுக ஆட்சி வேரோடு அறுத்து எறியப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.


Night
Day