நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 3வது நாளாக இருஅவைகளும் முடங்கியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடங்கியது. மக்களவை அதன் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் தொடங்கியது. அப்போது பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு’ எதிராக எதிர்க்கட்சியினர் பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். அப்போது நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி பதாகைகள் எடுத்து வந்தால் எம்.பி-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.

கடும் அமளிக்கு இடையே மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கான கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை கூடிய 9 நிமிடங்களில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மக்களவை கூடிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் தலைமையிலும் கூடியது. அப்போது மாநிலங்களவையில் பல்வேறு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எதிர்க்கட்சிகளால் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏற்க துணைத்தலைவர் மறுப்பு தெரிவித்த நிலையில் கடும் அமளி நிலவியது. இதனைத் தொடர்ந்து பேசிய மதிமுக எம்பி வைகோ, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தினார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் கூடிய 9 நிமிடங்களில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் மாநிலங்களவை கூடிய போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக முடங்கிய நிலையில், 3வது நாளான இன்றும் கூடிய சில நிமிடங்களில் இரு அவைகளும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day