எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தேநீர் விற்பனை செய்யும் சிறுவனாக வாழ்வை தொடங்கி, நாட்டின் பிரதமராக உயர்ந்த மோடியின் அரசியல் பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
முதலமைச்சராகவும், பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் சிம்மாசன அரியணையில் அமர்ந்து சீர்மிகு ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் இன்று. குஜராத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தேநீர் கடையில் வேலை செய்து தனது கடின உழைப்பாலும், தேச பக்தியாலும் நாட்டின் பிரதமாக உயர்ந்தவர் பிரதமர் நநேரந்திர மோடி.
குஜராத்தின் வத்நகரில் வசித்து வந்த தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி - ஹிராபென் மோடி தம்பதிக்கு 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி 3வது மகனாக பிறந்தவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. சிறுவயதில் பள்ளி முடிந்ததும் ரயில் நிலையத்தில் தந்தை வைத்திருந்த தேநீர் கடையில் அவருக்கு உதவியாக வேலை செய்த நரேந்திர மோடிக்கு, அரசியலில் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக தனது இளம் வயதிலேயே ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் இணைந்தார்.
அங்கு ஒழுக்கம், சமூக சேவை, தேசபக்தி ஆகிய கருத்துகளை உள்வாங்கிய அவர், 1987ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன்பின் பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, குஜராத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
1990ஆம் ஆண்டில் கட்சியின் தேசிய தேர்தல் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நரேந்திர மோடி, படிப்படியாக உயர்ந்து, 2001ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சரானார். அவரது பதவிக்காலத்தில் குஜராத் மாநிலம் விரைவான வளர்ச்சியை கண்டது. 2002 குஜராத் கலவர சர்ச்சைகள் மற்றும் சவால்கள் இருந்த போதும், மோடியின் புகழ் தொடர்ந்து வளர்ந்தது. தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று 2001 முதல் 2014 வரை முதலமைச்சராக இருந்த மோடி மிகவும் வலிமையான தலைவராக அறியப்பட்டார்.
தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியை பெற்றுத்தந்த நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமரானார்.
இந்த ஆட்சிகாலத்தில் மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, அடல் ஓய்வூதிய திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என வல்லுனர்களால் பாராட்டப்பட்டது.
பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து சென்று கொண்டிருந்த நிலையில் எதிரி நாடானா பாகிஸ்தான் நம்மை எப்படி தாக்கலாம் என திட்டம் தீட்டி காத்து கொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதியன்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் நாட்டிற்குள் புகுந்து உரி நகரிலுள்ள இந்திய ராணுவ தலைமையகத்திற்குள் தாக்குதல் நடத்தி 19 வீரர்கள் கொன்றனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்த பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்னும் ஆபரேஷன் மூலம் எதிரிகளை பந்தாடினார். இதன் மூலம் இந்தியாவின் பாதுகாவலன் என்பதை எதிரிகளுக்கு உணர்த்தினார் பிரதமர் மோடி. இதையடுத்து இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியது என்றே கூறலாம்.
இதையடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இமாலய வெற்றியின் மூலம் 2வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோயில் கட்டுமானம் போன்ற பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினார். மேலும், 2020 கொரோனாவை திறமையாக எதிர்கொண்ட பிரதமர் மோடியின் அரசு, பல்வேறு நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கி உதவியது.
பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணி நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இப்படி அனைவரிடமும் நல்லுறவை பேணியதன் காரணமாக பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றார் பிரதமர் மோடி. 25 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற முதல் பிரதமர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தியுள்ளார் என்றால் அது மிகையல்ல... இதன் மூலம் உலகில் செல்வாக்கான, பிரபலமான தலைவர்களில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.
இதையடுத்து 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 240 தொகுதிகளை வென்ற பாஜக, கூட்டணி கட்சிகள் உதவியுடன் மீண்டும் ஆட்சியமைத்தது. இதன் காரணமாக தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்று சாதனை படைத்தார் பிரதமர் மோடி. அமைதியான சூழலில் ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியை சுற்றிப்பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் குறிவைத்து தாக்கப்பட்டனர். குறிப்பாக இந்து பெண்களின் கணவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கணவனை இழந்து அழுது கொண்டிருந்த பெண்களிடம் தாக்குதல் குறித்து உங்கள் மோடியிடம் கூறுங்கள் என திமிராக கூறியிருந்தனர்.
பகல்ஹாம் தாக்குதலால் நாடே அதிர்ச்சியில் இருந்தது. உலக நாடுகள் பலவும் பகல்ஹாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் இந்திய பெண்களின் சிந்தூரத்தை அழித்தவர்கள் வேரறுக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி சூளுரைத்தார். இதையடுத்து மே 7 ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகளை இந்திய ராணுவமும், விமான படையும் சேர்ந்து தாக்கி அழித்து தரைமட்டமாக்கியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்தியாவின் தொடர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டது.
இந்திய பெண்களின் சிந்தூரத்தை சூறையாடிய கயவர்களை 2 இந்திய பெண்களை வைத்தே வேரறுக்க வைத்தார் பிரதமர் மோடி. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தையும், விமானப்படையையும் வழிநடத்தியது இரண்டு சிங்க பெண்கள் தான் என இந்தியா உலகரங்கில் நெஞ்சுரத்துடன் உரக்க கூறியது.
இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடி, 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தை முன்னெடுத்து வருகிறார். தனது வலுவான தொலைநோக்குப் பார்வை மற்றும் தீர்க்கமான தலைமைத்துவம் மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தலைவராக நரேந்திர மோடி தனித்து நிற்கிறார் என்றால் அது மிகையாகாது.