டெல்லியில் விவசாயிகள் பேரணியை நடத்தும் விவகாரம் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்டுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க காவல்துறையினரும், துணை ராணுவப்படையினரும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

இந்த நிலையில், விவசாயிகள் பேரணி நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் அதிஷ் அகர்வாலா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்த பின்னரும் விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயிகளின் இந்த பேரணி அரசியல் தூண்டுதலால் நடைபெறும் போராட்டம் போல இருப்பதாகவும், இதேபோல 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டத்தால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

டெல்லியின் எல்லைப் பகுதிகள் மாத கணக்கில் மூடப்பட்டதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி சிகிச்சைக்கு கூட செல்ல முடியாமல் பலர் உயிரிழந்ததையும் ஆதிஷ் அகர்வாலா குறிப்பிட்டுள்ளார். போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு துன்பம் இழைக்க விவசாயிகளுக்கு உரிமை கிடையாது என்பதால், உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Night
Day