காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சுதா-விடம் மர்மநபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சுதா, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி நாடாளுமன்ற அலுவல்களில் கலந்து கொண்டு வருகிறார். வழக்கம் போல் அவர் இன்று காலை டெல்லி சாணக்கியாபுரி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவருடன் மற்றொரு தமிழக எம்.பி-யான ராஜாத்தியும் நடைபயிற்சி சென்றிருந்தார். அப்போது போலாந்து நாட்டு தூதரகம் அருகே எதிர்திசையில் ஹெல்மட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், எம்.பி சுதாவிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்ட தப்பிச் சென்றார். 

இதில், எம்.பி சுதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதுடன், அவருடைய ஆடையும் கிழிந்துள்ளது. இதுகுறித்து சாணக்கியாபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது, தன்னுடைய 4 சவரனுக்கும் அதிகமான தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபரை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day