அருணாச்சலப்பிரசேதத்தில் 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியது அர்த்தமற்ற செயல் : இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது, அர்த்தமற்ற செயல் என இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தை ஆக்கிரமிக்க, சீனா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்ட சீனா, தற்போது நான்காவது பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான இடங்களுக்கு சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது. ஊர்கள், மலைகள், ஆறுகள் என 30 இடங்களுக்கு மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் பெயர் சூட்டியுள்ளது. இதனை தனது அரசு நாளிதழிலும் சீனா வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் நிகழாது என்றும் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறினார். 

இந்நிலையில், அருணாச்சலப்பிரசேதத்தில் 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது அர்த்தமற்ற செயல் என இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. பெயர்களை மாற்றுவதன் மூலம் இந்திய பகுதிகளை சீன சொந்தமாக்கிக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதனிடையே, இந்தியாவிடம் வித்தை காட்டுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அருணாச்சலபிரதேச முதலமைச்சர் பெமா காண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தியாவை தாய்நாடாக கொண்டதற்கு பெருமைப்படுபவதாகவும் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Night
Day