எழுத்தின் அளவு: அ+ அ- அ
குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை வைத்துக்கொண்டு இந்திய கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் போட்டி போட்டுக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியினர், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அதேநேரம் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாகக் கூறி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் போராட்டத்தால் ஈடுபட்டததால் இரு தரப்பு எம்பிக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 2 பாஜக எம்.பிக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவத்தால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் நாடாளுமன்ற வளாகம் அருகே கூடிய இந்தியா கூட்டணி எம்பிக்கள், அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பதவி விலக வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள், அம்பேத்கரின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் போட்டி போராட்டம் நடத்தினர். இதனால் நாடாளுமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.