மக்களுக்காக அரசியலுக்கு வந்ததால் மட்டுமே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இப்போதும் பெரும் தலைவராக போற்றப்படுகிறார் என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் 108வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுகளை புகழ்ந்து எடுத்துரைத்து வரும் நிலையில், The Great MGR என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். அதில், எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி கருணை நிறைந்தது எனவும் கல்வி, சுகாதாரம், பெண்களின் முன்னேற்றம், ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து, சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டோம் எனவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். குடும்பத்திற்காக அரசியலுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர் அல்ல என கூறியுள்ள பிரதமர் மோடி, மக்களுக்காகவே அரசியலுக்கு வந்ததால் மட்டுமே இப்போதும் அவர் பெரும் தலைவராக அனைத்து தரப்பினராலும் போற்றப்படுகிறார் என தெரிவித்தார்.