திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் ஆழித்தேரோட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
 
திருவாரூர் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். இந்த நிலையில் தியாகராஜர் கோயிலில் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இதனையொட்டி நேற்று இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.

அதை தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்டு பிரம்மாண்டமாக ஆடி அசைந்து 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முன்னதாக இன்று அதிகாலை விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டது. தியாகராஜர் தேரை அடுத்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. கீழரத வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து இன்று இரவு 7 மணி அளவில் நிலை அடியை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


varient
Night
Day