கோயில்கள் மற்றும் தேலாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு கோயில்கள் மற்றும் தேலாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பங்குத் தந்தை, இறைமக்‍கள் உள்ளிட்டோர் திருவிழாக்‍ கொடியை பவனியாக ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் உலக சமாதானத்துக்காக வெண்புறா பறக்க விடப்பட்டு மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க இறை ஜெபத்துடன் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே வயலோகத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தின் திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் மேளதாளங்கள் முழங்க புனித அடைக்கல அன்னை உருவம் தாங்கிய கொடியை ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் ஆலயத்தில் புனித அடைக்கல அன்னை உருவம் தாங்கிய கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவில் திரளான மக்‍கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

ராமநவமி கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக நாமக்‍கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ராமர் கோயிலில் சீதா திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெண்கள் சீர்வரிசை தட்டுகளுடன் ராமர் மடத்திற்கு வந்து கும்மி அடித்து, ராமர் சீதைக்‍கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அர்ச்சதை தூவி ராமர்-சீதை கல்யாண பஜனை பாடல்கள் பாட திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பெருந்திரளான பக்‍தர்கள் ஸ்ரீராமர்-சீதாவின் திருக்‍கல்யாண உற்சவத்தை கண்டு மகிழ்ந்தனர். 

புதுக்கோட்டை நகரின் திருக்கோகர்ணம் - கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜர் கிருஷ்ண பரமாத்மா ஆலயத்தின் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாகராஜருக்கு பலவகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக ஆண்கள் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கோவிலின் முன்பு கும்மி அடித்து சிறப்பு வழிபாடு நடத்தி, சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் சி.என். கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீராஜகோபால சுவாமி கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக சுமங்கலி பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்கள் விளக்கினை ஏற்றி அர்ச்சனை செய்து பாடல்கள் பாடினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கும் விளக்குகளுக்‍கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமங்கிலி பெண்களுக்கு புடவை, திருமாங்கல்ய சரடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை சீா்வரிசையாக வழங்கப்பட்டன.

சனிக்‍கிழமை தினத்தை முன்னிட்டு, காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு அதிக அளவிலான பக்‍தர்கள் வருகை தந்தனர். திருநள்ளாறின் புனித தீர்த்தமான நள தீர்த்த குளத்தில் பக்‍தர்கள் புனித நீராடிய பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து சனிபகவானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து எள்தீபம் ஏற்றி வழிபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, தெப்போற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வள்ளி தெய்வானை உடனாகிய முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருள மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீர்த்த குளத்தில் தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. தெப்பத்தை சுற்றி திரளான பக்தர்கள் சூழ்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி மற்றும் காவடி எடுத்தும் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜா கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமிக்‍கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கோயில் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள  கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷே விழா நடத்தப்பட்டது. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு, ரொக்‍கம் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கினர். அவர்களுக்‍கு கோயில் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நொச்சிவயல் புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர், ஸ்ரீ முத்துக்கண்ணு மாரியம்மன், ஸ்ரீ கல்யாண முருகன், ஸ்ரீ கருப்பையா கோவிலில் ஆண்டுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சிறு குழந்தைகளுடன் பால் காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். சில பக்‍தர்கள் அலகு குத்தி, முளைப்பாரியுடன் கோயிலுக்‍கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வண்ண மலர்களால் அம்மனுக்‍கு அலங்காரம் செய்யப்பட்டு, ஆலயத்தின் வளாகத்தில் அம்மன் உலா கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்‍கப்பட்ட ஊஞ்சலில் அம்மன் சொரூபம் வைக்‍கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து மனமுருக வழிபட்டனர்.

Night
Day