எமனாக வந்த பூனை... கோர முகத்தை காட்டிய ரேபிஸ்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் பூனைக்கடித்ததால் அரசு மருத்துவமனையில் தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பூனை கடித்ததை அலட்சியமாக விட்டதால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இளைஞர் பட்ட அவஸ்தைகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த மாதம் வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய்க்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி ஜன்னல் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கொண்டார். அந்த சம்பவமே இன்னும் பலரது நெஞ்சை விட்டு நீங்காத நிலையில், தற்போது அதே போன்றதொரு உறையவைக்கும் சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உள்ள காமராஜர்நகரில் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த ஆனந்தன் - விஜயலெட்சுமி தம்பதிக்கு இரு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான பாலமுருகன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக பல்வேறு வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்திற்கு உதவி வந்துள்ளார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் உறங்கிகொண்டிருந்தபோது திடீரென 2 பூனைகள் சண்டையிட்டபடி வந்து பாலமுருகன் மீது விழுந்துள்ளது. இதனால் பாலமுருகன் பதற்றத்தில் எழுந்த போது பூனை எதிர்பாராதவிதமாக பாலமுருகனின் தொடையில் கடித்துள்ளது. இதில் சிறிய காயம் ஏற்பட்டதால் காயங்களுக்கான டீட்டி ஊசியை மட்டும் செலுத்திவிட்டு இயல்பாக பணிக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த வாரம் பாலமுருகன் பெற்றோரிடம் அடிக்கடி தலைவலி வருவதாக கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீரை கொடுத்தபோது பயந்து விலகுவது போன்று செய்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 2 நாட்கள் அனுமதித்த நிலையில், ரேபி்ஸ் அறிகுறி இருப்பதாக கூறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாலமுருகனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், ரேபிஸ் நோய் சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அப்போது பாலமுருகன் கூச்சலிட்டபடி அறையில் இருந்து வெளியேற முயன்றுள்ளார். இதனையடுத்து ரேபிஸால் பாதிக்கப்பட்ட பாலமுருகனை அங்குள்ள தனி அறையில் வைத்துள்ளனர்.

அங்கு இரவு முழுவதும் காயத்தால் ஏற்பட்ட வலியாலும் மன உளைச்சலாலும் புலம்பியபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த பாலமுருகன், அதிகாலையில் அறையில் இருந்த போர்வையால் மேலே இருந்த கம்பியில் கட்டி தொங்கியபடி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனையடுத்து மருத்துவமனை செவிலியர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது பாலமுருகனின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு அறைக்கு அனுப்பிவைத்தனர். பாலமுருகனின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாலமுருகன் பூனை கடித்த காயம் இருப்பதை கூட சொல்லாமல் இருந்துவிட்டதாகவும், அவரது உறவினர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, ரேபிஸ் நோய் இருப்பதாக பாலமுருகனிடம் கூறியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சகோதரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பூனைக்கடி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கால்நடைத்துறை மதுரை மண்டல இணை இயக்குனர் முருகன், பூனை கடித்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் பூனைகள் வளர்க்க கூடியவர்கள் அதற்கான தடுப்பூசிகளை சரியாக செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். வீட்டு விலங்குகளை பராமரிப்பதற்கேற்ற தடுப்பு ஊசிகள் அரசு கால்நடை மருத்துவமனைகளில் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.

ஒரு சிறிய காயம் தானே என சாதாரணமாக விட்டது, பின்னால் எந்த அளவிற்கான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வே ஓர் உதாரணம்... நாய் கடிதானே, பூனை கடிதானே, எலிக்கடிதானே என அலட்சியமாக இல்லாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகினாலே எந்த பிரச்சனையும் இல்லை என்பதே பலரது எண்ணமாக உள்ளது. 

Night
Day