இம்சிக்கும் இ- பாஸ்... எதிர்க்கும் வணிகர்கள்...தவிக்கும் சுற்றுலா பயணிகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் முறையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் வணிகர்களின் எதிர்ப்பு ஆகியவை குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு... 

சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை அனுமதிக்க  இ பாஸ் முறையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி, வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களையும் வார இறுதியில் 8,000 சுற்றுலா வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கட்டுப்பாடுகள் விதித்தது. 

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி செவ்வாய் கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் உடன் கூடிய இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 15 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் சோதனைக்குப் பிறகே சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் செவ்வாய் கிழமை முதல் அமலுக்கு வந்த இ-பாஸ் முறையால் மதியம் ஒரு மணிக்கே மாவட்டத்திற்குள் நுழைய 6000 வாகனங்களுக்கு இ-பாஸ்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் நீலகிரி கேரள எல்லையில் உள்ள நாடுகாணி சோதனைச் சாவடியில் செவ்வாய் கிழமை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

இந்த நிலையில் புதன் கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில், ஏற்கனவே இ-பாஸ் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்பக் கோளாறால் புதிதாக இ - பாஸ் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.  இதுகுறித்து இ-பாஸ் பதிவு செய்யும் அதிகாரிகளிடம் கேட்டபோது நாடுகாணி பகுதியில் இணையப் பிரச்சனை காரணமாக  இ பாஸ் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் இது விரைவில் சீராகும் எனவும் தெரிவித்தனர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி மாவட்டம்  முழுவதும்  நடைபெற்ற முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இ பாஸ் நடைமுறையால் நாள் ஒன்றுக்கு 6000 சுற்றுலா வாகனங்கள், சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமூறை நாட்களில் 8000 சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதால் மாவட்டத்தின் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால்  இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும், மாவட்டத்தில் உள்ள தேயிலை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம்  நடைபெற்றது. 

நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தனியார் தங்கும் விடுதி, சுற்றுலா வாகனம், உணவகம், விவசாயம், ஆட்டோ ஓட்டுனர் என மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்கள் சார்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 வட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதோடு, தாவரவியல் பூங்கா, உதகை படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் குறைவான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.  முழு அடைப்பு காரணமாக உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த சுற்றுலா பயணிகள் அம்மா உணவகங்களில் குவிந்து பசியாறினர்.  

இந்நிலையில் இ-பாஸ் நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் தான் மாவட்ட அளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக நீலகிரி மாவட்ட வணிகர் பேரமைப்பு சங்கங்களின் தலைவர் பரூக் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அதற்குள் தீர்வு காணாவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

கடும் எதிர்ப்புகளையும் மீறி நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறை சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில், இந்த நடைமுறையை விளம்பர திமுக அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்பாக உள்ளது. 

Night
Day