எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா- இங்கிலாந்து இடையே தடையற்ற பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், இருநாடுகளும் அடைய உள்ள பலன்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளில் 4 நாள் அரசு முறை பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின்பு, இருநாட்டு பிரதமா்கள் முன்னிலையில் மத்திய தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து தொழிற்துறை அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர், "FTA" எனப்படும் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்தில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான சராசரி வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. இதன்மூலம் 2030ம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகம் 120 பில்லியன் டாலர் என்ற உயர்நிலைக்கு கொண்டு செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதியாகும் தோல், காலணிகள், துணிகள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி பன்மடங்கு குறைக்கப்பட உள்ளது.
இந்திய ஜவுளி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 8 முதல் 12 சதவீத இறக்குமதி வரியை இங்கிலாந்து அரசு நீக்க உள்ளதால், திருப்பூர், சூரத், லூதியானா நகரங்களில் இருக்கும் ஏற்றுமதியாளர்கள் பலனடைய உள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளின் விலை இங்கிலாந்தில் குறைய உள்ளது.
இந்தியா ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான வரி இங்கிலாந்தில் குறைக்கப்பட உள்ளதால் இந்த தொழில் சார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ள சென்னை, புனே, குருகிராம் உள்ளிட்ட பகுதிகள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இறக்குமதியாகும் சில குறிப்பிட்ட ரக கார்களுக்கான வரி 100 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
இங்கிலாந்து விஸ்கி மீதான வரி 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகக் குறைக்கப்பட்ட உள்ளதால் இந்தியாவில் அவற்றின் மீதான விலை பன்மடங்கு குறைய உள்ளது.
மேலும், இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள பொறியாளர்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் இங்கிலாந்துக்கு எளிதில் செல்வர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனெரிக் மருந்துகளுக்கு இங்கிலாந்தில் மிக விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பாசுமதி அரிசி, தேயிலை, நறுமண மசாலா பொருள்கள் மீதான விலை இங்கிலாந்தில் குறைக்கப்பட உள்ளது. இதனால் கேரளா, அசாம், குஜராத், மேற்கு வங்க விவசாய ஏற்றுமதியாளர்கள் பலனடைய உள்ளனர்.
இந்தியாவில் சோலார் திட்டங்கள், ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் இங்கிலாந்து அதிக முதலீடு செய்ய உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், இன்வெர்டெர்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களுக்கு எவ்வித இறக்குமதி வரியும் இல்லை என்பதால் இந்திய நிறுவனங்களுக்கு மிகுந்த பலன் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஐ.டி. மற்றும் ஐ.டி. துறை சார் பிற பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் அத்துறைகளும் பலனடையும் என நம்பப்படுகிறது. முக்கியமாக இந்திய அரசின் டெண்டர்களில் இனி இங்கிலாந்து நிறுவனங்கள் எளிதாக அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முக்கிய சாதனை என்றும், இதன் மூலம் இருநாடுகளிலும் வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் இருநாட்டு பிரதமர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.