பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 12 நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியாவின் தங்க மகன் ஹர்வீந்தர் சிங் மற்றும் ப்ரீத்தி பால் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். 

17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 28ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில், 170 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 463 வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் தங்கம் வெல்ல தடுமாறி வரும் நிலையில், பாரா ஒலிம்பிக்கில் இம்முறை  இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனையுடனும், புதிய தனிப்பட்ட திறனை வெளிப்படுத்தியும் பதக்கங்களை வென்று முத்திரைப் பதித்துள்ளனர்.

வில்வித்தையில் ஹர்விந்தர்சிங், கிளப் த்ரோவில் தரம்பிர் முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளனர். கைகள் இல்லாமல் காலாலே அம்பெய்திடும் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றது அனைவரையும் கவனத்தையும் பெற்றது.

இதுபோக, உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று அசத்தினார். இதன்மூலம், தொடர்ந்து 3 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்தார் மாரியப்பன் தங்கவேலு.. 

இந்நிலையில், கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை வீல்சேர் கூடைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் அமெரிக்கா 73-69 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடர்ந்து 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் பெண்கள் பிரிவில் நெதர்லாந்து 63-49 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் வழக்கம் போல் முதல் மூன்று இடங்களை முறையே சீனா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை ஆக்கிரமித்தன. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 18 வது இடத்தைப் பிடித்தது. கடந்த பாரா ஒலிம்பிக்ஸ் தொடரில் 19 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த இந்தியா, இம்முறை கூடுதலாக 10 பதக்கங்களை வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. 

இதைத் தொடர்ந்து இரவில் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், சாகசங்களுடன் நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. வீரர், வீராங்கனை அணிவகுப்பில் இந்திய அணிக்கு வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். பின்னர் தீபம் அணைக்கப்பட்டு, 2028-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டதுடன் விழா கோலாகலமாக நிறைவடைந்தது.. 

Night
Day