உயிரை கொல்லும் புற்றுநோய் - மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

கல்லீரல் புற்றுநோயால் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி, மரணத்தை தழுவியுள்ளார்... உயிரை கொல்லும் புற்றுநோய்க்கான காரணம் என்ன? புற்றுநோயை குணப்படுத்த முடியாமல் போவதற்கு என்ன காரணம் என்பது பற்றி சற்று விரிவாக காணலாம்...

மனிதர்களை கொல்லும் கொடிய நோயாக புற்றுநோய் பார்க்கப்படும் நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது 47 வயதே நிரம்பிய இசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவி உள்ளார்.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மூத்த புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மருத்துவ பாண்டியன் பாஸ்கர் ராவ், புற்றுநோய் பற்றிய அரிய விளக்கங்களை அளித்துள்ளார்.

அதன்படி ஒரு உடலில் செல் சாதாரணமாக பிறந்து இறந்துவிடும்... அப்படி இறக்காத உடல் செல், பல்வேறு செல்களாக பிரிந்து அதிக எண்ணிகையிலான செல்லாக உருமாறும் அதுவே புற்றுநோய் என அழைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

உடலில் அனைத்து பாகங்களிலும் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதுடன், சாலிட் மெலிக்னன்சி, லிக்விட் மெலிக்னன்சி என இரு வகை புற்றுநோய் மனிதர்களை வெகுவாக தாக்கி வருகிறது.

மனித உடலில் தொண்டை, நுரையீரல் உள்ளிட்ட உடற்பாகங்களில் வந்தால் அது சாலிட் மெலிக்னன்சி எனப்படும். இரத்த தொடர்புடைய அனைத்து புற்றுநோய் வகைகளும் லிக்விட் மெலிக்னன்சி என்றும், சிறுவர்களுக்கு வரக்கூடிய புற்று நோய்கள் பீடியட்ரிக் மெலிக்னன்சி எனப்படும்.

புற்றுநோய் முற்றிப்போய் விட்டால் காப்பாற்றுவது என்பது இயலாத காரியம் என்றும், நான்காவது ஸ்டேஜில் இருந்தால் அது கொடியது என்றும் கூறப்படுகிறது.

மூளையில் வரக்கூடிய சில வகை புற்றுநோய் மிகவும் கொடியது என்றும், நுரையீரல் கல்லீரல் பித்தப்பை உள்ளிட்ட பகுதிகளில் வரக்கூடிய புற்றுநோய் என்பது பெரும்பான்மையாக முற்றிய பிறகே கண்டுபிடிக்க முடியும் என்பதால் அது உயிரை கொல்லும் கொடிய புற்றுநோயாக மாறுவதாக தெரியவந்துள்ளது.

ரத்த புற்று நோயில் சில வகையான புற்று நோய்கள் மிகவும் கொடிய தன்மை உடைய புற்று நோயாகும் என மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ் கூறியுள்ளார்.

நுரையீரல் கல்லீரல் பித்தப்பை பேன்கிரியாஸ் உள்ளிட்ட பாகங்களில் காணப்படும் புற்றுநோய், மூளை மற்றும் சில வகையான எலும்பு புற்று நோய் ஆகிய அனைத்தும் முற்றிய நிலையில் தான் கண்டுபிடிக்க இயலும் என்பதால் இவை கொடிய வகை புற்று நோய்கள் என்றழைக்கப்படுவதாக மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ் கூறியுள்ளார்.

உடம்பில் உள்ள அனைத்து வகை புற்று நோய்களுக்கும் ஆரம்ப நிலையில் அறிகுறிகள் என்பது இருக்கும் என்றும், பெரும்பாலும் நாம் அதனை உதாசீனப்படுத்துகிறோம் என்றும், உதாசீனப்படுத்தும் பொழுது அது முற்றிய நிலைக்கு சென்றுவிடும் என்றும், முதல் நிலை, இரண்டாம் நிலை புற்றுநோய் உடலில் எந்த பாகத்தில் இருந்தாலும் அது முற்றிலும் குணமாக கூடிய சாத்திய கூறுகள் அதிகம் என்றும், மூன்றாவது நிலை நான்காவது நிலை புற்றுநோய் உடலில் எந்த பக்கத்தில் இருந்தாலும் அது குணமாக கூடிய சாத்தியக்கூறு என்பது மிகவும் குறைவு என மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ் தெரிவித்தார்.

முதல் மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்து எளிதாக குணப்படுத்த முடியும் என்றும், மூன்றாவது நிலையில் அறுவை சிகிச்சை, கீமோதெரஃபி, ரேடியேஷன் உள்ளிட்ட சிகிச்சைகள் மூலமாக புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்றும், நான்காவது நிலை என்பது உடலில் ஒரு இடத்தில் உள்ள கட்டி அதற்கு தொடர்பு இல்லாத மற்ற பகுதிகளில் பரவி இருந்தால் அந்த நோயை கட்டுப்படுத்த முடியும் ஆனால் முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றும் மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ் கூறினார்.

நுரையீரல் புற்றுநோயும் கல்லீரல் புற்றுநோயும் அது பொதுவாக வளரும் பொழுது அருகில் நரம்புகள் அதிகமாக இல்லாத காரணத்தினால் முதலிலேயே வலி என்பது தெரியாது என்றும், மூச்சுத் திணறல் வயிறு வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் மூலமாக தான் தெரியும் என்றும், இது தெரிவதற்கு நாட்கள் ஆகிவிடும் தெரியும் போது இது அதிகமாக வளர்ந்து இருப்பதால் இறுதி நிலையில் தான் அதை கண்டுபிடிக்க அதிக வாய்ப்பு ஏற்படுவதாக மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ் தெரிவித்தார்.

கல்லீரலை மட்டும் புற்றுநோய் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ், கல்லீரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை புற்றுநோய் பாதித்திருந்தால் முதலில் கீமோதெரபி மூலம் புற்றுநோயை குணப்படுத்திவிட்டு பின்னர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்றார்.

மார்பக புற்று நோய் என்பது ஒரு பெண் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக வருகிறது என்றும், அதிகமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பால் வரக்கூடியது என்றும், வாழ்க்கை முறையும், மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளிட்ட காரணத்தால் தான் பெண்களுக்கு அதிக அளவு மார்பக புற்று நோய் வருவதாக மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ் தெரிவித்தார்.

மாதவிடாய் சரியாக இல்லாமல் இருப்பது, கர்ப்பமடைவது தாமதம் ஆகிய காரணத்தால் மார்பக புற்று நோய்க்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது என்ற மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ், சரியாக உண்ணாமல், உறங்காமல், தொடர்ந்து உழைக்கும் போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு மார்பக புற்று நோய் ஏற்படுகிறது என்றார்.

புற்று நோய் என்பது பல காரணங்களால் ஏற்படக் கூடியது என்பதால், அதற்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பது சிரமம் என்ற மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ்,  தடுப்பு ஊசி மட்டும் புற்றுநோயை தடுக்காது என்று கூறினார்.

சரியான புற்று நோய் நிபுணரை பார்க்காமல், அறுவை சிகிச்சை வேண்டாம் என்ற மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவ், ரேடியேஷன், கீமோதெரபி ஆகியவற்றில் எது நோயை குணப்படுத்தும் என்பதை புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தான் முடிவு செய்ய முடியும் என்றார்.

Night
Day