VRS வாங்கிய எஸ்.பி... கொத்து கொத்தாக மரணம்... பின்னணி என்ன!

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் சாராய ஆறு ஓடி மரணங்கள் ஏற்படும் என கணிக்தே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மோகன் ராஜ் விருப்ப ஓய்வு பெற்று சென்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கள்ளச்சாராயத்தை தடுக்க முயன்ற காவல் உயரதிகாரி ஒருவருக்கே அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே மோகன் ராஜ் விருப்ப ஓய்வு பெற்று சென்றதாக கூறப்படுகிறது. மோகன் ராஜ் யார், தான் கணித்தது நடந்துவிட கூடாது என்பதால் விருப்ப ஓய்வு பெற்று சென்றாரா என்று அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் பிளஸ்2 மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். இதனால் அங்கு பெரும் போராட்டம் நடைபெற்று பள்ளி உள்ளிட்ட சில கட்டடங்கள் சூறையாடப்பட்டன.

அப்போது மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் மாற்றப்பட்டு மோகன் ராஜ் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். நேரடி எஸ்.ஐ.,யாக, 1987ல் தேர்வான மோகன்ராஜ், தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், சட்டம் - ஒழுங்கு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில், பணியாற்றி உயரதிகாரிகளிடம் நன்மதிப்பை பெற்றார். 

சர்ச்சைக்குரிய நேரத்தில், அவரை கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக நியமித்தால், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுவார் என அறிந்தே, அப்போதைய டி.ஜி.பி., சைலேந்திரபாபு, எஸ்.பி.,யாக இருந்த செல்வகுமாரை மாற்றிவிட்டு, மோகன்ராஜை நியமித்தார்.

எதிர்பார்த்தது போலவே செயல்பட்டு, சில பிரச்சனைகளுக்கு சுமுகமாக அணுகி, மக்கள் கோபத்தைத் தணித்து, மாவட்டத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார் மோகன் ராஜ். அப்போது தான் கள்ளச்சாராயம் மாவட்டம் முழுவதும் ஆறாக ஓடுவதை அறிந்து நடவடிக்கை எடுக்க முன்வந்தார். மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு அலசி, கள்ளச்சாராய வியாபாரிகளை கண்டுபிடித்து கைது நடவடிக்கைக்கு முன்வந்தார். 

இதற்கு முட்டுக்கட்டையாக திகழ்ந்தவர்கள்தான் இன்றைய ஆட்சியாளர்கள். அதுவும்  
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையீடு அதிகளவில் இருந்தது தெரியவந்தும், மக்களின் உயிரை காக்க அதிரடி நடவடிக்கைக்கு தயாரானார் மோகன்ராஜ். 

ஆனால் கள்ளச்சாராயம் தொடர்பாக கைது செய்பவர்களுக்கு ஆதரவாக வந்து அவர்களை விடுதலை செய்ய வைப்பதும், கள்ளச்சாராய விற்பனையை ஒடுக்க நினைக்கும் அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதே பாணியை பின்பற்றி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த மோகன்ராஜையயும் திமுகவினர் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அதையும் மீறி நடவடிக்கை எடுக்க முற்பட்டால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

எவ்வளவோ முயன்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாததால் பெரிய அளவில் விபரீதம் ஏற்பட போகிறது என்பதை கணித்து தான், ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் இருந்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் ராஜ் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார்.

பல பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற்ற நிலையில், கள்ளச்சாராய சாவுகளால் தனக்கும், தனது பதவிக்கும் ஆபத்தோ, அவபெயரோ ஏற்பட கூடாது என முன்கூட்டியை யோசித்து விருப்ப ஓய்வில் செல்ல கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி மோகன்ராஜ் உள்துறை செயலாளர் அமுதா அவர்களிடம் மனு அளித்திருந்தார். இந்த விவகாரம், அப்போது காவல் துறை வட்டாரங்களில், பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் சொந்த பணிகளுக்காக விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதி வாங்கி விட்டு, மோகன் ராஜூக்கு கடந்த நவம்பர் மாதம் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய எஸ்.பி.யாக சமே சிங் மீனா என்பவர் டிசம்பர் மாதத்தில் பதவியேற்று கொண்டார். கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்து சமீபத்தில் உத்தரவிட்டது.   

மோகன்ராஜ் கணித்தது போலவே, தற்போது கள்ளக்குறிச்சி முழுவதும் சாராய சாவுகள் நிகழ்ந்துவிட்டன. மோகன்ராஜ் எடுக்கவிருந்த நடவடிக்கையை தடுக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு இத்தனை பெரிய துயரம் நடந்திருக்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.  

கட்டுக்கடங்காத கள்ளச்சாராய விற்பனை தடுக்க நினைத்தும், அரசியல் அழுத்தம், உயரதிகாரிகளின் அழுத்தம் போன்ற காரணங்களால் உயரதிகாரி ஒருவர் விருப்ப ஓய்வு பெற்று சென்றதை அப்போது விமர்சித்த பலர், தற்போது மோகன் ராஜூக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

Night
Day