வியாபாரத்தை நிறுத்திய கோவிந்தராஜ்... வலுக்கட்டாயமாக இழுத்து வந்த திமுக புள்ளிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மரண ஓலத்திற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ். திருந்தி வாழ நினைத்த சாராய வியாபாரியை மீண்டும் சாராய விற்பனை செய்ய தூண்டிய ஆளுங்கட்சியின் செயல் குறித்தும், கோவிந்தராஜன் யார், இவருக்கும், சாராய விற்பனைக்கு உள்ள தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி கொத்து கொத்தாக உயிரை விட்டவர்களின் தகனம் செய்யப்படும் கோர காட்சிகள் தான் இவை.

இந்த கோர காட்சிகளுக்கு முக்கிய காரணங்களாக விளங்குபவர்களில் ஒருத்தர் தான், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன். இவர் இப்பகுதியில் பிரபல சாராய விற்பனை செய்யும் வியாபாரியாக திகழ்ந்து வந்தார்.

சுமார் 25 ஆண்டுகளாக சாராய விற்பனை செய்து வரும் இவருக்கு, இதய பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்த பின், சாராய விற்பனை தொழிலில் இருந்து விலகி உள்ளார்.

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா என்பது போல், திமுகவினர் இவரை மீண்டும் சாராய விற்பனைக்கு தூண்டிவிட பணம், மதுபோதை மீதுள்ள பற்றால் மீண்டும் சாராய பாக்கெட்டை கையில் எடுக்க தொடங்கியுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனையால் என்ன பணம் கிடைத்துவிட போகிறது என நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை சொல்கிறோம். 

சாராய விற்பனையால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளார் கோவிந்தராஜ். இந்த சாராயத் தொழிலில் இவருக்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் மட்டும் கிடைக்கும் என்றும் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாய் ஆளுங்கட்சியான திமுகவினருக்கு செல்வதாக நமது செய்தியாளர்கள் நடத்திய கள ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 8வது வார்டு பகுதி மிகவும் முக்கிய பகுதியாக விளங்குகிறது. இந்த பகுதியில்தான் சாராய விற்பனை படுஜோராக நடந்துள்ளது. அதுவும் காவல்நிலையம் சுமார் 300 மீட்டர் என்ற குறுகிய தொலைவே உள்ள நிலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்துள்ளது. 

அரசு மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டாலும் 8வது வார்டு பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் பாக்கெட் மூலம் கிடைக்கும் என்றும் அதுவும் திருமணம், காதணி விழா, துக்க நிகழ்வு உள்ளிட்டவைகளுக்கு ஆர்டர் மூலம் 100 பாக்கெட்டுகள் முதல் 300 பாக்கெட்டுகள் வரை டோர் டெலிவரியும் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

சாராய விற்பனை தொடர்பாக கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

பல ஆண்டுகளாக சாராயம் விற்றாலும் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சாராய விற்பனை தொழிலுக்கு முழுக்கு போட நினைத்தபோதும், ஆளுங்கட்சியினரின் தொடர் வற்புறுத்தலால் மீண்டும் சாராயம் விற்பனை செய்ய வந்ததும் தற்போது வெளியாகி உள்ளது.

Night
Day