தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் சுமார் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. படிவங்களை திரும்பப் பெறுவதற்காக தேர்தல் ஆணையம் 2 முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக இன்று வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். 

தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த வாக்காளர்கள் 12 லட்சத்து 22 ஆயிரத்து 144 பேரும், இறந்தவர்கள் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 555 பேரும், முகவரி இல்லாதவர்கள் 27 ஆயிரத்து 328 பேரும், இரட்டை வாக்குப்பதிவுள்ளவர்கள் 18 ஆயிரத்து 772 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு வாக்காளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்து 4 ஆயிரத்து 649 ஆகும். வாக்காளர்கள் நீக்கத்துக்குப் பின்னர் வரைவு வாக்காளர் பட்டியலின் படி சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 676 ஆக உள்ளது. 

வரைவு வாக்காளர்கள் பட்டியலின்படி சென்னையில் ஆண்கள் 12 லட்சத்து 47 ஆயிரத்து 690 பேரும், பெண்கள் 13 லட்சத்து 31 ஆயிரத்து 243 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 743 பேரும் உள்ளனர். சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Night
Day