எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கனமழை காரணமாக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தது.
சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சிமெண்ட் தரைதளம் இல்லாத ஆலத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல்மணிகள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் 5 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சிமெண்ட் தரைதளம் அமைத்து, நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதற்கு முன்னதாக வீசிய சூரைக்காற்றில் பாண்டி என்பவரது தோட்டத்தில் இருந்த சுமார் 700 பப்பாளி மரங்களும், ராஜயோக்கியம் என்பவரது தோட்டத்தில் இருந்த 50 முருங்கை மரங்களும் சேதமடைந்துள்ளது. இதனால் பப்பாளி பயிரிட்டதில் 2 லட்சமும் முருங்கை மரம் சேதம் காரணமாக ஒரு லட்சம் வரையும் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தார். வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்.