எழுத்தின் அளவு: அ+ அ- அ
தொடங்கிய செயல்களில் வெற்றியைத் தரும் விஜயதசமியான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்தனர்.
சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சரஸ்வதி, விநாயகருக்கு பூஜை செய்த பின் செண்டை மேளம் முழங்க வித்யாரம்பம் தொடங்கியது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து தாம்பூல தட்டில் நிரப்பிய அரிசியில். தமிழின் முதலெழுத்துகளான அ, ஆ என எழுத வைத்தும் குழந்தைகளின் நாவில் தங்க குச்சியால் ஓம் மகா கணபதி என்று எழுதியும் குழந்தைகளின் கல்வி பயணத்தை துவங்கி வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரர் கோவிலில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னதியில் கோயில் குருக்கள், குழந்தைகளின் நாவில் தங்க ஊசியாலும் பச்சரிசியில் குழந்தைகளின் விரல்களாலும் அகர முதல எழுத்துக்களை எழுதியும் கல்வியை தொடங்கி வைத்தனர். விஜயதசமியன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்கினால் கல்வி செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் குழந்தைகளை அழைத்து வந்துள்ளதாக பெற்றோர்கள் கூறினர்.
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலிலும் ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் வைபவத்தில் ஏராளமான மழலைகள் தங்கள் கல்விப் பயணத்தை தொடங்கினர். குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் கோயிலில் வழிபாடு செய்த பின்னர் குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான அ, பிள்ளையார் சுழி,அம்மா,அப்பா என்று எழுத வைத்தனர். இக்கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் கல்வி பயணத்தை தொடங்கினர்.