எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை நிறுவ அனுமதி கோரிய தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவு வாயிலுக்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு வெண்கல சிலை மற்றும் பெயர் பலகை நிறுவ வள்ளியூர் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க தமிழ்நாடு அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது.
ஆனால் சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிலையை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
மேலும் பொது இடங்களில் இடையூறாக இருக்கும் சிலைகளை அகற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதியை விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த சிலையை நிறுவுவதற்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பஞ்சாயத்து உள்ளிட்ட அனைவரும் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
ஒரு தலைவரின் புகழை பரப்புவதற்காகவும், அவரை பெருமைப்படுத்துவதற்காகவும் சிலை நிறுவப்படுவதாகவும், அதே நேரத்தில் பொது இடத்தில் இடையூறாக இருக்கும் என கருதியே சென்னை உயர்நீதிமன்றம் சிலையை நிறுவ அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவித்த உச்சநீதிமன்றம், அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என திட்டவட்டமாக தெரிவித்து, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.