மீண்டும் தலைதூக்கும் லாட்டரி விற்பனை.. ஜெயா ப்ளஸ் எதிரொலியால் விழித்துக் கொண்ட போலீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தடை செய்யப்பட்ட 3ஆம் நம்பர் லாட்டரி விற்பனை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதுகுறித்து ஜெயா பிளஸ் செய்தி வெளியானதை தொடர்ந்து காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடைச்சட்டம் 1979-ன் கீழ் தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு லாட்டரி சீட்டு விற்பனையானது அப்போதைய முதலமைச்சர் புரட்சிதலைவி அம்மா அவர்களால் தடை செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை லாட்டரி சீட்டு என்ற சூதாட்ட வலையில் ஏழை, எளிய மக்கள் சிக்காமல் இருந்து வந்தனர். ஆனால் இன்று விளம்பர திமுக ஆட்சியில் மாண்புமிகு அம்மாவால் ஒழிக்கப்பட்ட லாட்டரி விற்பனை படுஜோராக நடைபெற்று வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகள் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் நமது தமிழகத்திலும் சில வியாபார பெருச்சாலிகள் மறைமுகமாக லாட்டரி மோகத்தை சாமானியர்களின் மனதில் விதைத்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தோராயமாக 5க்கும் மேற்பட்ட வியாபார முதலாளிகள் தங்களுக்கு கீழாக 50க்கும் மேற்பட்ட வியாபார சில்வண்டுகளை கைக்குள் வைத்து கொண்டு லாட்டரி விற்பனையை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் விற்பனையாகும் லாட்டரிகளின் பரிசு தொகை விழும் லாட்டரி சீட்டின் இறுதி மூன்று நம்பர்களை சொல்லினால் பணம் தருகிறோம் என ஆசைவார்த்தைக்கூறி ஏழை மக்களிடம் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். 

ஆரணி சுற்றுவட்டாரப்பகுதியில் 3ஆம் நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவது குறித்து கடந்த ஒரு வருடமாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் ஆரணி நகர தனி பிரிவு காவலர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவலர் துறை அதிகாரிகளோ சூதாட்ட கும்பல்களிடம் மாமுல் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக மூணு நம்பர் லாட்டரி எழுதி விளையாடும் சூதாட்ட விற்பனைக்கு அனுமதியளித்திருப்பது தெரியவந்ததிருக்கிறது. இதுகுறித்து நமது ஜெயா பிளஸ் தொல்லைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து 3ஆம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது 1/2 டோக்கன் 40 ரூபாய்க்கும் முழு டோக்கன் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. பணம் கட்டும் நபர் அன்றைய பரிசு விழும் லாட்டரியின் இறுதி மூன்று நம்பரை சொல்லி டோக்கன் போட்டுக் கொண்டால் 1/2 டோக்கனுக்கு 13 ஆயிரம் ரூபாயும், முழு டோக்கனுக்கு 35 ஆயிரம் ரூபாயும் பரிசு தொகையாக கொடுக்கப்படும் என்பதே அந்த 3ஆம் நம்பர் சூதாட்டத்தின் மையக்கரு. 

இப்படி கேரளா, சிக்கிம் என ஒரு நாளைக்கு 4 சுற்று வரை ஏழை எளிய மக்களை ஏமாற்றி விளையாட்டு என்ற பெயரில் பணம் பறித்துள்ளனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள ஏழை எளிய மக்கள் சிலர் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து வீட்டை விட்டு சென்றதுடன், தற்கொலையும் செய்துள்ளனர்.

அந்த அளவுக்கு ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும், உயிரையும் அழிக்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையை விளம்பர திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்குமா என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Night
Day