மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்எதிர்பார்ப்பில் பின்னலாடை நிறுவனங்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட் ஆக இல்லாமல் சிறு, குறு தொழில் நிறுவனங்களை 
பாதிப்புகளில் இருந்து மீட்டெடுக்கக்கூடிய பட்ஜெட்டாக இருக்குமா என திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி முதல் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

நடப்பு ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மீது ரயில்வே, பெட்ரோலியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அந்த வகையில் ஜவுளித்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுமா என திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திருப்பூரில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே சிறு, குறு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

நூல் விலை உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏற்றுமதியில் வங்கதேசமும் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் ஆயத்த ஆடைகளுக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதால் வங்கதேச ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டு, டாலர் சிட்டியின் வருவாயை வெகுவாக பாதித்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற இடைக்கால பட்ஜெட்டில் ஆடைகள் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படும் என திருப்பூர் பனியன் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வேலை வாய்ப்பு பெற்று வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இடைக்கால பட்ஜெட் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாட்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டித்தரும் தொழிலாளர்களுக்கு நீண்ட காலமாகவே குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படாமல் இருந்து வருகிறது.... இடைக்கால பட்ஜெட்டில் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தருவதற்கு  தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் தொழிற்சங்கங்களிடையே அதிகரித்துள்ளது.

பின்னலாடை தொழிலின் முதுகெலும்பாக இருக்கும் சிறு,குறு தொழில் நிறுவனங்கள், கடந்த 10 ஆண்டுகளாக எந்தவிதமான சலுகைகளும், சிறப்பு அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறாததால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளன.

மின் கட்டண உயர்வு, நூல் உயர்வு, தொழில் மந்த நிலை காரணமாக திருப்பூரில் 70 சதவீத சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, 30 சதவீத நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

எனவே நலிந்த சிறு குறு தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமையவேண்டும் என பின்னாலாடை நிறுவனத்தினர் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இல்லையெனில் அடுத்த சில ஆண்டுகள் ஒட்டுமொத்த சிறு குறு நிறுவனங்கள் காணாமல் போய், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என பின்னலாடை நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

Night
Day