திருநள்ளாறில் அர்ச்சகரிடம் கைவரிசை - 9 மாதத்திற்குப்பின் சிக்கிய மாமியார், மருமகன்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் அர்ச்சகரிடம் நல்லவர்கள் போல நடித்து உணவில் மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்த இருவரை, 9 மாதங்களுக்குப்பிறகு போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் வசித்து வருபவர் ரோகிணி ஐயர்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ரோகிணி ஐயர் அர்ச்சகராக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சனீஸ்வரர் கோவிலுக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், 30 வயது இளைஞர் ஒருவரும், தாய், மகன் என தங்களை அர்ச்சகர் ரோகிணி ஐயரிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

இருவரையும் சனீஸ்வர பகவானை வழிபட வைத்து அனுப்பி வைத்த ரோகிணி ஐயர், பணி முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

ரோகிணி ஐயர் வீட்டுக்கு சென்ற சில நிமிடங்களில் அவரது வீட்டுக்கு சென்ற தாய் மற்றும் மகன் ஆகியோர், தங்களுக்கு வெளி இடங்களில் தங்கி பழக்கம் இல்லை என்பதால் இரவு ரோகிணி ஐயர் வீட்டிலேயே தங்க அனுமதி கேட்டுள்ளனர்.

ரோகிணி ஐயரும் மனிதாபிமானத்துடன் இருவரையும் தங்க அனுமதித்துள்ளார். அப்போது ரோகிணி ஐயருக்கும், அவரது மனைவிக்கும் ஓட்டலில் இரவு உணவு வாங்கி தருவதாக தாயும், மகனும் வலை விரித்துள்ளனர்.

தம்பதியரும் பாசமாக சொல்கிறார்களே என சாப்பிட சம்மதிக்க, ஓட்டலுக்கு சென்ற மகன் கேரக்டரில் வந்த நபர் உணவை வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

உணவை உண்ட சில நிமிடங்களில் ரோகிணி ஐயரும், அவரது மனைவியும் மயங்கி சரிய, வீட்டுக்குள் புகுந்த தாயும், மகனும், பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகளையும், 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகினர்.

மறுநாள் காலையில் ரோகிணி ஐயரின் மனைவிக்கு மயக்கம் தெளிய கண் விழித்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருப்பதையும், நகை பணம் திருடு போனதையும் கண்டு கதறியுள்ளார். ரோகிணி ஐயரும் மயக்கம் தெளிந்து எழுந்து வீட்டில் பொருள்கள் சிதறி கிடப்பதை பார்த்து, தாய், மகன் கேரக்டரில் வந்த இருவரும் தங்களுக்கு அல்வா கொடுத்ததை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 9 மாதங்களாக எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசார் துவண்டு போன நிலையில், காரைக்கால் சைபர் கிரைம் மற்றும் திருநள்ளாறு போலீசார் சனிக்கிழமை அன்று தமிழக பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய இருவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அந்த இருவரும் தான் ரோகிணி ஐயர் வீட்டில் கொள்ளை அடித்தவர்கள் என்பதும், இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மாமியார் சுப்புலட்சுமி சென்னை போரூரை சேர்ந்தவர் என்பதும் மருமகன் வேலாயுதம் பெரம்பலூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இருவர் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில்  திருட்டு வழக்கு பதிவாகி உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது... பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதை போல ஜெகஜால கில்லாடிகள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Night
Day