எழுத்தின் அளவு: அ+ அ- அ
போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுநாள் வரை சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தற்போது தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப்பாதுகாப்பும் பல சலுகைகளும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைத்திட வழி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 ஆவது மண்டலங்களில் வசிக்கும் மற்றும் வந்து செல்லும் ஏறத்தாழ 20 லட்சம் பொதுமக்களுக்கான பொது சுகாதார சேவைகள் பாதிக்கப்படுவது மிக முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும், போராட்டம் தொடர்வதால் இந்த மண்டலங்களில் தூய்மைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு குப்பைகள் தேங்கி மக்களுக்கு பெரும் சுகாதார பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும் அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 5 மற்றும் 6-ஆவது மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணிகள் ராம்கி நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, மொத்தம் 3,809 தூய்மைப் பணியாளர்களை பணியில் நியமிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளதாக குறுப்பிட்டுள்ள சென்னை மாநகராட்சி, தற்போது வரை ஆயிரத்து 770 பணியாளர்களை ராம்கி நிறுவனம் பணியமர்த்தியுள்ளதாகவும், மீதமுள்ள 2 ஆயிரத்து 39 பணியிடங்களை ஏற்கனவே பணியாற்றி வந்த சுய உதவிக் குழுக்களின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை மாநகராட்சி தங்களது கோரிக்கையை நிறைவேற்று வரும் போராட்டம் தொடரும் என தற்காலிக தூய்மை பணியாளர்கள் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் மாநகராட்சிகள் உள்ளாட்சியின் கீழ் வரும் நிலையில் உள்ளாட்சித்துறைக்கு அமைச்சர் இருக்கும் போது இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரான சேகர்பாபுவுக்கு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.