எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வார சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. பொங்கல் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால், ஆடுகள் 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. வெள்ளாடு, செம்மறியாடு, மறிக்கை ஆடு உள்ளிட்ட பல வகையான ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு மற்றும் கிடா ஆடு 12 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடுகளை வாங்க குவிந்தனர். சுமார் 1 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.