எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணாக்கர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட் பகுதிகளில், மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் பள்ளி வேன் மீது மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவி சாருமதி, மாணவர் செழியன் ஆகிய இருவர் மற்றும் மாணவர் நிவாஸ் உள்ளிட்ட மூன்று மாணாக்கர்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள மாணவர் விஸ்வேஷ் மற்றும் வேன் ஓட்டுநர் ஆகியோரும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் எலெக்ட்ரீசியன் அண்ணாதுரையும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டி கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பரின் அஜாக்கிரதையால் இந்த கோர விபத்து ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரும், வேன் ஓட்டுநரும் தெரிவிக்கின்றனர்- அதாவது பள்ளி வேன் சென்ற போது ரயில்வே கேட் திறந்தே இருந்ததாக தெரிவிக்கும் நிலையில், இந்த அசம்பாவிதம் ஏற்பட யார் காரணம் என்பதை மத்திய அரசு முறையாக விசாரித்து, தவறு இழைத்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட் பகுதிகளில், மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டு கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றது- அதிலும் குறிப்பாக மாணவச்செல்வங்கள் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்- மண்ணை விட்டு போன உயிர்களை யாராலும் மீண்டும் கொண்டு வர முடியாது- எனவே, ஓட்டுநர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டு கொண்டுள்ளார்.
அதே சமயம், செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் ஏற்கனவே தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், திமுக தலைமையிலான அரசு இது சம்பந்தமாக ஏன் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும், மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான அரசை புரட்சித்தாய் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.