எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. முக்கிய நீர்நிலைகளில் இருந்து பல ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் பெய்து வரும் கனமழையால் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் நேற்று 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 37,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 24 ஆயிரத்து 200 கனஅடியும், கொள்ளிடத்தில் 12 ஆயிரத்து 200 கனஅடியும், கிளை வாய்க்காலில் 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி பொதுப்பணித்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், 10க்கும் மேற்பட்ட சிறு ஓடைகளிலிருந்து வரும் மழை நீராலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பெரியகொடிவேரி, மேவானி, புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. இந்த தண்ணீர் இன்று பிற்பகலில் மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றில் குளிக்க இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து 3 ஆயிரத்து 73 கனஅடி நீரும், முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயிரத்து 655 கனஅடி நீரும் வைகையாற்றில் திறக்கப்பட்டுள்ளதால் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், யானைக்கல் தரைப்பாலம், தத்தனேரி தரைப்பாலம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 12வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவிக்கு வரும் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளனர்.