எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஊழியரை காலில் விழ வைத்து நகரமன்ற உறுப்பினர் அவமதித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா முனியப்பன் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறி நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, நகராட்சி ஆணையர் அறைக்கு முனியப்பனை அழைத்த நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்டு போ என கூறியுள்ளார்.
நகராட்சி ஆணையர் அறையில் மனமுடைந்து நின்று கொண்டிருந்த முனியப்பன் திடீரென மன்னித்து விடுங்கள் என அழுதபடி ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை சக கவுன்சிலர்கள் வேடிக்கை பார்க்கும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா மற்றும் காலில் விழ வற்புறுத்திய நகரமன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.