எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டத்தில் இன்றும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என்றும் நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று தென் மற்றும் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதே போன்று நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிதுத்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோன்று இன்று தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்